கடன் அன்பை முறித்ததா? - காட்சி 4

 காட்சி 4


தினசரி நாட்காட்டியில் பத்து தாள்கள் கிழிக்கப்பட்டன. 240 தடவை கடிகாரத்தில் பெருமுள் சுத்திவிட்டது. அன்று தேசியக்கொடியிடம் இருந்து ஒரு தகவல் கிடைத்தது. என்னை மன்னித்துவிடு மா, ஒருவாரத்தில் பணத்தைத் திருப்பிக் கொடுக்கிறேன் என்றேன். ஆனால் என்னால் அது இயலவில்லை...  என அனைத்தையும் கூறத் தொடங்கினான். முழு ஊரடங்கு அரசாங்கம் பிறப்பித்ததால் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. அதில் நான் வேலை பார்த்த bakery யும் அடங்கும்.  என்னால் எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணத்தைப் பெறவோ ஈட்டவோ இயலவில்லை மா. இந்த மாதம் வீட்டில் வரும் சம்பளத்தில் எவ்வாறாவது உன்னிடம் வாங்கிய கடனை திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் வந்த பணம் பஞ்சாய் மாயமானது. நான் செய்வது அறியாமல் இருக்கிறேன் மா. கூடிய விரைவில் பணத்தை கொடுத்து விடுகிறேன். என்னை மன்னித்துவிடு. இன்னும் கொஞ்சம் அவகாசம் கிடைக்குமா? இதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. யாரும் உதவ முன்வராத பொழுது நீ தக்க சமயத்தில் வந்து உதவியது, நீந்த தெரியாத என்னை கடல் விழுங்கிய பொழுது, மின்னலாய் காப்பாற்ற வந்த கப்பல் போல் தோன்றினாய் என் கண்களுக்கு. இப்பொழுது என் செயலால் உனக்கும் அம்மாவிற்கும் ஏதேனும் மனஸ்தாபம் வந்து விடுமோ, என்பதை நினைத்தால் இதயத்தில் தையல் அறியாதவன் ஊசி நூல் கொண்டு தைத்துப் பழகுவது போல ரணமாகிறது என்றான். 

இதைப் பார்த்தவுடன் இயற்கைப்பண் மனத்தில் எழுந்த முதல் சிந்தனை செந்தேனின் பெயரை இதில் பயன்படுத்தி இருப்பதைப் பற்றித்தான். மனத்தை திடமாக்கிக்கொண்டு வீரவினையிடம், செந்தேன் இன்னும் கொஞ்சம் கால அவகாசம் கேட்கிறாள் என்று கூறினாள். அதற்கு வீரவினையோ சரி, அவர்களையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். செந்தேன் வேலைக்குச் செல்லும் பெண்மணி அன்றே . கல்லூரி மாணவி ஆயிற்றே. அவள் வேண்டும் என்றா இவ்வாறு செய்கிறாள்? அல்லவே! ஏதோ அவள் சூழ்நிலை. ஊரடங்கு வேறு. அவளது அண்ணாவிற்கு வேலை கூட தற்காலமாக இல்லாமல் போய் இருக்கலாம். யார் அதை அறிவார்கள். அவர்களையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்;  இன்னும் ஒரு ஏழு நாட்களுக்குள் கொடுக்கச் சொல்கிறாயா? ஏனெனில், அன்று வங்கியில் அடமானம் வைத்து இருந்த நகைக்கு வட்டிக் கட்ட வேண்டும் என்றாள். 

அந்த விசியத்தை இயற்கைப்பண் கொடியிடம் சொல்லிவிட்டு மன்னிப்பு எல்லாம் கேட்டு என்னை மூன்றாவது மனுஷியாக நடத்தாதே கொடி. நீ வருந்தாதே, எல்லாம் நல்லதாய் முடியும் என்று கூறி மன அறுதல் கூறியவாறே, கொடி உனக்கு ரகசியத்தைப் பற்றித் தெரியுமா என்று கேட்டாள். அதற்கு இல்லை மா தெரியாதே, என்றான். பிரபலமான ரகசிய (ஈர்ப்பு விதி) ஆவணப் படத்தை whatsapp-பில் அனுப்பி விட்டு நீ இதைக் கண்டிப்பாக பார் கொடி, நீ பணத்தையும், கடனையும் அணுகும் முறையை கண்டிப்பாக மாற்றி, உனக்கு ஒரு உத்வேக நம்பிக்கையை ஊட்டும் என்றாள் இயற்கைப்பண். கண்டிப்பா பாக்குறேன்  மா என்றான். ஆனால் தேசியக்கொடியினால் ஏழு நாட்களுக்குள் குடுக்க முடியாது என்று யூகித்திருந்தாள் இயற்கைப்பண். அம்மாவிற்க்கு நகைக்கு கட்டவேண்டிய பணம் எவ்வாறாவது வேறு வழிகளில் கிடைத்து விட வேண்டும் என்று பிள்ளையாரிடம் வேண்டிக்கொண்டாள்.

Comments