- Get link
- X
- Other Apps
காட்சி 3
தேவையான தொகையோ 4500. ஒருவரிடம் மொத்த தொகையையும் கேட்டால் கிட்டாது என்று, ஒவ்வொருவரிடமும் நூறோ, இருநூறோ, உங்களால் எனக்கு எவ்வளவு கடன் கொடுக்க முடியுமோ, அவ்வளவு கொடுங்கள் என கேட்கத்தொடங்கினாள். குறிப்பாக, ஐந்து நபர்களிடம் கேட்டாள்.
முதலில் “குரலமுது”. குரலமுது அவளின் சூழ்நிலையைச் சொன்னாள். அதாவது, தற்போது உதவ முடியாது என்று.
இரண்டாவதாக, “செந்தேன்”. செந்தேனும் இயற்கைப்பண்ணும் ஒரே பள்ளிக்கூடத்தில் எட்டு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்தனர். எட்டாம் வகுப்பில்தான் மிகவும் நெருங்கிப் பழகி, ஒன்பதாவது வகுப்பிலேயே சின்ன மனக்கசப்பினால் பிரிந்தனர். அதன்பிறகும் பேசிக் கொள்வார்கள் ஆனால் முன்பு போல் அந்த உறவு இல்லை. ஆனால், எப்பொழுதும் அவர்கள் இடையே நட்பையும் தாண்டி ஒரு அற்புத பந்தம் இருப்பதைப் பார்க்கலாம். இருவரும் மூன்று ஆண்டு பட்டப்படிப்பில் கடைசி ஆண்டில் உள்ளனர். 21 வயது ஆகிறது. இப்பொழுதும் இயற்கைப்பண் செந்தேன் மீது அந்த தனித்துவ நட்பைக் கொண்டிருக்கிறாள். செந்தேனிடம் பணம் கேட்டபொழுது அவளால் தற்போது உதவ இயலாது என்றாள். உதவ முடியாததற்கு வருத்தமும் தெரிவித்தாள் ஏனெனில் இயற்கைப்பண்ணிற்கு ஏற்ப்படும் காசு பற்றாக்குறையைத் தீர்ப்பது தேசியக்கொடி மட்டும் அல்ல பல சமயங்களில் செந்தேனும் கூட.
மூன்றாவது “இதயஅழகு”. இதயஅழகு பெயரைப் போலவே அழகான இதயத்தைக் கொண்டவன். நண்பர்களுக்காக எதையும் செய்யும் துணிவு, மற்றவரைப் புரிந்து கொள்ளும் விதம், இசையை ரசிக்கும் அழகு, நான் அனைத்தையும் அறிந்தவன், எனக்கு அனைத்தும் தெரியும் என்று பாசாங்கு காட்டிக் கொள்ளும் இளைஞர்கள் மத்தியில், தெரியாதவற்றைத் தெரியாது என்று எதிர் பாலினமிடமே ஒப்புக்கொள்ளும் மனோதைரியம் கொண்டவன். இதயஅழகும் இயற்கைப்பண்ணும் ஒரே கல்லூரியில் மூன்று ஆண்டு பட்டப்படிப்பைப் பயின்றனர். படிக்கும் பொழுது ஒருமுறை கூட அவர்கள் இருவரும் பேசிக்கொண்டது இல்லை. இன்னும் சொல்லப் போனால், அந்த மூன்று ஆண்டில், நேரில் ஒருமுறை கூட பேசியது இல்லை. ஆனால், கல்லூரி முடிந்த உடன் எவ்வாறோ whatsapp பில் நண்பர்கள் ஆனார்கள். கல்லூரியிலேயே, இதயஅழகின் சில நற்குணங்களை பற்றி இயற்கைப்பண் அறிவாள். நண்பர்கள் ஆகியவுடன் இன்னும் மிகுதியாகத் தெரிந்தது. இதயஅழகுவிடம் கடன் கேட்ட பொழுது, அவனிடம் பணம் இல்லாவிட்டாலும் அவனது தோழ, தோழியர்களிடம் வினவி சேகரித்து தருகிறேன் என்றான்.
பின்பு, இறுதியில் இயற்கைப்பண்ணின் தமக்கை “இலக்கியாவும்” வகுப்பு தோழன் “ஸ்ரீராமும்” ஐநூறு மற்றும் நானூறு தந்தருளினர். ஸ்ரீராமும் அவனிடம் பணம் இல்லாவிட்டாலும் அவனது தோழ, தோழியர்களிடம் வினவி காசைப்பெருக்கித் தந்தான். தொள்ளாயிரம் கிடைத்து விட்டது, இன்னும் 3600 வேண்டுமே, யாரிடம் கேட்கலாம் என்று மூளையைக் கசக்கிக்கொண்டு இருந்தாள்.
அப்பொழுது, தொலைக்காட்சியில் chinshan னின் சுட்டித்தனத்தை ரசித்தது கொண்டு இருந்த வீரவினையிடம் கேட்கலாமே என்ற யோசனை தட்டியது. அம்மா என்று அழைக்க வாய் விளைந்த பொழுது, சற்றுப்பொறு என்று மூளை தடுத்தது. தோழிகளை அறிந்த அளவு அம்மா தோழர்களை அறிய மாட்டார்கள். அவர்களுக்கு அதிகம் பரிச்சியப்படாத எனது தோழனுக்கு காசு தருவார்களா? ஒரு வேளை முன்வரவில்லை என்றால் என்ன செய்வது, நம்மிடம் இருப்பதோ 900 மட்டும் தான் இன்னும் 3600 வேண்டியுள்ளதே, அதுவும் இன்று இரவிற்குள். வேண்டாம், நாம் இந்த விஷயத்தில் கொடுப்பார்களா கொடுக்கமாட்டார்களா என்று அம்மாவை சோதித்துப் பார்க்கவேண்டாம். அதற்குப் பதிலாக நாம் அம்மாவிற்கு நன்கு பரிச்சியப்பட்ட ஒரு தோழியின் பெயரைக் கூறிவிடுவோம். செந்தேனைத் தாயார் நன்கு அறிவார்கள். காசு இருந்தால் நிச்சயமாகத் தருவார்கள் என்று எண்ணினாள் இயற்கைப்பண். செந்தேன் மீது கொண்டு இருந்த உரிமையினாலும், ஏற்கனவே கூறியது போல் அந்த தனித்துவ நட்பினாலும் இயற்கைப்பண்ணிற்கு அணித்தனமான அசைக்க முடியாத ஒரு நம்பிக்கை இருந்தது, அதாவது செந்தேன் நமக்காக எந்த வித உதவியையும் செய்வாள், எதையும் புரிந்து கொள்வாள் என்று.
ஒரு சிறிய எடுத்துக்காட்டு, நாம் காதலனையோ அல்லது காதலியையோ பார்க்கச் சென்றால், ஒரு உயிர்த்தோழியின் வீட்டுக்குச் சென்று வருவதாகக் கூறிவிட்டுச் செல்வதும் ஒரு வழக்கம் அல்லவா?! ஏன் ஏதோ ஒரு தோழியின் பெயரைக் கூறாமல், குறிப்பாக உயிர்த்தோழியின் பெயரைக் கூறுகிறோம்? ஏனெனில் அந்த உயிர்த்தோழி நம்மை நன்றாகப் புரிந்து கொள்வாள் என்பதாலும், அந்த தோழி மேல் நாம் வைத்து இருக்கும் உரிமையினாலும் தானே?! அது மட்டும் இன்றி, இயற்கைப்பண் பெயரை மாற்றிக் கூறிவிடலாம் என்று எண்ணியவுடன், மனக்கதவை முதலில் தட்டியது செந்தேனே. பல தோழிகள் இருந்தும், இதயத்தில் செந்தேனின் யோசனை மட்டும் ஏன் வரவேண்டும். அவள் என்னுடைய செந்தேன், எனக்காக எதையும் செய்வாள், என்று இயற்கைப்பண் செந்தேன் மீது கொண்டு இருந்த ஒப்பற்ற நங்கூர நம்பிக்கையினால் தானே.
இவை அனைத்தையும் வைத்து, தேசியக்கொடியின் பெயருக்குப் பதிலாக செந்தேனின் பெயரை வீரவினையிடம் கூறினாள் இயற்கைப்பண். அதற்கு வீரவினையோ கல்விக்கு நான் உதவத் தயார். உனக்குப் பல பேர் உதவவில்லை என்றால், நீ இந்த இடத்தில் இருக்கமாட்டாய். சரி, எவ்வளவு நாட்களில் திருப்பிக்கொடுக்க முடியும் என்று கேள் என்றார். இதை பற்றி தேசியக்கொடியிடம் வினவிய பொழுது ஒரு வாரத்தில் என்னால் திருப்பிச் செலுத்திட முடியும் என்றான். வீரவினையும் அந்த கால அவகாசத்திற்கு ஒப்புக்கொண்டார்.
இந்த விஷயத்தை செந்தேனிடம் கூறக் கூட இல்லை இயற்கைப்பண். ஒரு வாரத்தில் என்ன மாறிவிடப் போகிறது என்ற நம்பிக்கை ஆலமரம் போல் வியாபித்து இருந்தது. மணி சுமார் எட்டு இருக்கும். தேசியக்கொடியிடம் காசு கிடைத்து விட்டது என்று கூறும் வேளையில் இயற்கைப்பண் சந்தோச வானத்தில் இருந்தாள். தேசியக்கொடி அதை அறிந்ததும் நிம்மதி கடலில் நீந்தலானான். ஈடுஇல்லாத நன்றி உணர்வை வெளிப்படுத்தினான்.
ஒருவருக்கு உதவும் பொழுது மனத்தில் எழும் சந்தோசம், பண்ணை ரசிப்பது போல, அறியாததைக் கண்டு பிடிப்பது போல, தாய் தந்தையின் சிரிப்பை ஒருசேரக் காண்பது போல, இதயத்தில் தேன் அபிஷேகம் செய்வது போல, கிணற்றில் குளிப்பது போல, வெள்ளிக்கிழமை அந்தியைப் போல, நம் உயிர் உறவை உயர்ந்த நிலையில் பார்ப்பது போல ஒரு இனிய அனுபவம். ஆத்மார்த்தமாக, முழுமனதோடு உதவிய அனைவருக்கும் அந்த அற்புத அனுபவத்தை ருசிப்பதற்கான வாய்ப்பு கிட்டும். இயற்கைப்பண்ணும் அதை ருசித்தாள். அடுத்த நாள் காலையில் இலக்கியாவிடமும் ஸ்ரீராமிடமும் வாங்கிய 500 மற்றும் 400 திருப்பி google pay யில் அனுப்பினாள். அவ்வாறு அனுப்புகையில் கொஞ்சம் காசு அதிகமாக அனுப்புவது இயற்கைப்பண்ணிற்கு வழக்கம். எனவே இலக்கியாவிற்கு 510 உம், ஸ்ரீராமிற்கு 425 கொடுத்து ice cream வாங்கி சாப்பிடுமாறு சொல்லி, ஆபத்தில் உதவியதிற்கு நன்றிகளையும் தெரிவித்தாள் .
Comments
Post a Comment